ஒருநாள் போட்டிகளில் சச்சின் ஒரே தேவன்!!!

கடந்த 2011 டிசம்பர் 23... உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி தந்த நாள். கிரிக்கெட் உலகின் கடவுள் என புகழப்படும் சச்சின் அன்றோடு ஒரு நாள் போட்டிகளில் ஆடுவதிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார். இருபத்தி மூன்று ஆண்டுகள் ஆடிய சச்சினின் ஒவ்வொரு சாதனையும் உலக சாதனை என சொல்கிற அளவுக்கு அவர் கிரிக்கெட்டின் ஈடு இணையில்லாத ஆட்டக்காரராக திகழ்ந்தார் அவர். அவரின் விளையாட்டு ஜாலங்களின் வழியாக ஒரு சின்னப்பயணம் போவோமா?

சச்சினை நம்மில் பலருக்கு சிறந்த மட்டைப்பந்து ஆட்டக்காரராக மட்டுமே தெரியும். ஆனால், ஒரே மைதானத்தில் இரண்டு முறை ஐந்து விக்கெட் வீழ்த்திய வீரர் என்கிற பெருமையும் சச்சின் வசமே இருக்கிறது. உலகின் மிகச்சிறந்த அணியாக அவர் காலத்தில் திகழ்ந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக, மிக அதிக ரன்களை சேர்த்தவர் இவரே. ஆஸ்திரேலியா நாட்டில் சச்சினுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமுண்டு. சச்சினின் பெயரில் ஒரு தெருவே இருக்கிறது. உலகின் அதிகபட்ச டெஸ்ட் சராசரி வைத்திருக்கும் டான் பிராட்மன் ‘தன்னைப்போல ஆடுகிறார்’ என சிலாகித்து சொன்ன வீரர் சச்சினே.

72212.jpg

சச்சினின் வெற்றிகள் சுலபமானதாக இருக்கவில்லை. ஏகப்பட்ட வலிகள் அவரை வாட்டி எடுத்திருக்கின்றன. டென்னிஸ் ஆட வந்தவர், உருவத்தில் குள்ளமென்பதால் கிரிக்கெட் வந்தார். வேகப்பந்து வீச்சைதான் காதலித்தார். பின் டென்னிஸ் லில்லியின் அறிவுரையால் பாட்டிங்கில் கவனம் செலுத்தினார். டென்னிஸ் எல்போ சிக்கல், முதுகுவலி என பல்வேறு உடல் ரீதியான பிரச்னைகளை சமாளித்து மீண்டு எழுந்து 23 ஆண்டுகள் சச்சின் இருந்ததே பலருக்கு ஆச்சரியம். அதிலும் 121 கோடி மக்களின் எதிர்பார்ப்பை தோளில் தாங்கி ஆடிய அவர், பல சமயங்களில் மிகப்பெரிய பாடங்களை நடத்தி இருக்கிறார். தூக்கி வளர்த்த செல்ல அப்பாவின் மரணத்திற்கு சென்றுவிட்டு திரும்பி தூங்காத அழுத கண்களோடு ஆடி, 101 பந்துகளில் 140 ரன்களை கென்யாவுக்கு எதிராக 1999 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் குவித்துவிட்டு, தலையை தூக்கி அப்பாவுக்கு
சமர்ப்பணம் செய்தார். அது இறுதிவரை தொடர்ந்தது.

நம்புவதற்கு கடினமாக கூட இருக்கும். 49 சதங்களை விளாசித்தள்ளிய சச்சின், தன் முதல் போட்டியில் டக் அவுட் தான் ஆனார். ஆனாலும் விடாது போராடுகிற குணம் அவரை உச்சபட்ச சாதனையாளர் ஆக்கியது. முதல் சதம் அடிக்க சச்சினுக்கு 79 ஒருநாள் போட்டிகள் ஆயின. அதுவரை கீழ்வரிசையில் ஆடிக்கொண்டிருந்த அவர், ஓபனிங் பாட்ஸ்மேன் சித்துவுக்கு கழுத்து வலி என்பதால், தானே முன் வந்து கேட்டுக்கொண்டு களமிறங்கி அடித்து ஆடிய ஆட்டத்தோடு ஆரம்பித்த அந்த இன்னிங்ஸ் 463 ஒரு நாள் போட்டிகளுக்கு பின் முடிந்திருக்கிறது.

பாகிஸ்தான் அணியுடன் சச்சினின் ஆட்டம் எப்போதுமே கவனத்திற்கு உள்ளாகும். 1989-ல் குட்டிப் பையனாக மூக்கில் ரத்தம் சொட்ட அடிவாங்கி ஆடியதில்தான் சச்சினின் பயணம் துவங்கியது அங்கே. மிக சிறந்த அப்துல் காதரின் பந்தை 6,0,4,6,6,6 என பறக்க விட்டு 18 பந்துகளில் 53 ரன்கள் அடித்த சச்சின் அதையே ஆடிய காலமெல்லாம் தொடர்ந்தார். ஒரு முறைகூட உலக கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோற்றதில்லை. அந்த வரலாறுக்கு சச்சினே முக்கிய காரணம். 2003 உலககோப்பையில் 75 பந்துகளில் 98 ரன்கள்; 2011 உலககோப்பை அரையிறுதியில் அணியே சொதப்பியபோது 85 ரன்கள் அடித்தார்.

மைதானத்துக்கு உள்ளே மிக அதிகபட்ச நாகரீகம் கொண்ட சச்சின், யாரேனும் திட்டினால்கூட மட்டையால் மட்டுமே பதில் சொல்வார். 2007 உலகக்கோப்பையில் இந்திய அணி முதல் சுற்றில் வெளியேறியபோது, கிரேக் சேப்பல் அவரை, ‘அணிக்காக ஆடவில்லை’ என சொன்னபோது கண்ணீர் விட்ட அவர், அப்போதும் கோபப்படவில்லை.
இளம் வீரர்களை ஊக்குவித்தார். அணியை விட்டே விலகி இருந்த யுவராஜை ஊக்கப்படுத்தி, மீண்டும் அணிக்குள் வர செய்தார். ஐந்து உலககோப்பை கைநழுவி போனபோதும், மனம் கலங்காமல் தீராத தாகத்தோடு ஆடினார். உலகக்கோப்பையை சச்சினுக்காக வெல்ல வேண்டும் என அணி ஆடியது. வென்றும் காண்பித்தது. எப்போதும் அழாத சச்சின் அன்று அழுதார். 37 வயதிலும் இரண்டு சதங்களை அடித்து, அரையிறுதியில் சிறப்பாக ஆடிய சச்சினின் கனவை
அணியே சுமந்து கோப்பை வென்றபோது, அதை சச்சின் கையில் தான் திணித்தது.

மதுபான விளம்பரத்தில் நடிக்க மறுத்த சச்சின், கிரிக்கெட்டுக்காக மட்டுமே தன் வாழ்வை அர்ப்பணித்தார். ஆடுகிறபோதெல்லாம் தேசமே அவருடன் சேர்ந்து உற்சாகமடைந்தது. தோற்று மீண்டு வருவோம் என்கிற மன தைரியத்தை எல்லா இளைஞர்கள் மனதிலும் விதைத்த நாயகனை கண்ணீரோடு கிரிக்கெட் அனுப்பி வைக்கிறது. டெஸ்ட் ஆசையோடு வரவேற்கிறது. எது இத்தனை ஆண்டுகாலம் இயங்க வைத்தது அவரை. அவரே சொல்கிறார் "பிசாசை போல் பயிற்சி செய்வேன், தேவதை போல ஆடுவேன். ஒவ்வொரு முறை தேசிய கீதத்தை கேட்கிறபோதும், மட்டையை தொடுகிறபோதும் உண்டாகிற அந்த சிலிர்ப்பு பதினாறு வயதில் உண்டான அதே குதூகலம் இன்று வரை தொடர்கிறது.

Comments