ஆமவடை மோர்க்குழம்பு செய்வது எப்படி? துவாதசி தின விருத ஸ்பெஷல்!!!
ஆமவடை மோர்க்குழம்பு
தேவை: கெட்டித் தயிர் - 2 கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு. அரைப்பதற்கு: மல்லி (தனியா) - 2 டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவவும்). ஆமவடை செய்வதற்கு: துவரம்பருப்பு - கால் கப், உளுத்தம்பருப்பு - கால் கப், காய்ந்த மிளகாய் - 2, பச்சை மிளகாய் - ஒன்று, இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - 8 இதழ்கள். மேலே தூவுவதற்கு: நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்.
![vikatan%2F2019-12%2F682eaf09-beae-4c8f-9](https://images.assettype.com/vikatan%2F2019-12%2F682eaf09-beae-4c8f-9974-42bc7d62fb27%2F116.jpg?w=640&auto=format%2Ccompress)
செய்முறை: துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு இரண்டையும் கழுவி காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து நீர்விட்டு அரை மணி நேரம் ஊறவிடவும். கடலைப்பருப்பை நீர்விட்டுத் தனியாக அரை மணி நேரம் ஊறவிடவும். ஊறியதும் துவரம்பருப்பு, உளுத்தம்பருப்புடன் காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு ஊறிய கடலைப்பருப்பில் உள்ள நீரை வடிகட்டி கடலைப்பருப்பை மட்டும் சேர்த்து, இஞ்சித் துருவல், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை, வெண்ணெய் சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, பிசைந்த மாவில் இருந்து தேவையான அளவு எடுத்து உருட்டி இரண்டு உள்ளங்கைகளிலும் லேசாக எண்ணெய் தடவி உருண்டையை ஒரு கையில் வைத்து மறு உள்ளங்கையால் லேசாக அழுத்தவும் (ஓரங்களில் மெலிதாகவும் நடுவில் உப்பிக்கொண்டும் இருக்கும். எனவேதான் இதற்கு ஆமவடை என்று பெயர்). தட்டிய வடையை எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
தனியா, சீரகம், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, ஆகியவற்றை மிக்ஸியில் நீர்விடாமல் கொரகொரப்பாகப் பொடித்து தேங்காய்த் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து சேர்த்து நீர்விட்டு அனைத்தையும் கெட்டியாக, நைஸாக அரைக்கவும். தயிரைக் கடைந்து மோராக்கவும். (அதிகம் நீர்விடாமல்). அடிகனமான பாத்திரத்தில் மோரை ஊற்றி அரைத்த விழுதைச் சேர்த்து உப்பு, மஞ்சள்தூள், சர்க்கரை சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து, அடுப்பை `சிம்’மில் வைத்துக் கொதிக்கவிடவும். கொதித்து நுரை தட்டியதும் தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்துச் சேர்த்து பொரித்து வைத்துள்ள ஆமவடைகளைச் சேர்த்து இறக்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிட்டு கொத்தமல்லித்தழை தூவவும்.
குறிப்பு: துவாதசி அன்று மூன்று பருப்பு சேர்த்து வடை செய்து படைக்க வேண்டும் என்பதால் மோர்க் குழம்பில் இந்த வடை சேர்க்கப்படுகிறது.
Comments
Post a Comment